×

வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக ஆவியாகும் தண்ணீர்: மொத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பதால் அக்டோபர் வரை சீரான குடிநீர் சப்ளை; பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை

*சென்னை குடிநீர் வாரியம் உறுதி

தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதல் வெப்பத்தின் தாக்கம் மக்களை வீடுகளிலேயே முடக்கும் அளவுக்கு உள்ளது. சிறுவர்கள், முதியவர்கள் பகல் நேரங்களில் வெளியில் வர வேண்டாம் என்று தமிழக அரசும் எச்சரித்து வருகிறது. அந்த அளவுக்கு வெயில் கொடுமை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோடை வெயிலான அக்னி வெயில் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை. ஆனாலும், அக்னி வெயிலை விட தற்போது வெப்பம் மிக அதிகமாகவே உள்ளது. நகர்ப்புறங்களில் மட்டுமல்ல, இந்த ஆண்டு கிராமப்புறங்களையும் வெயில் கொடுமை விட்டு வைக்கவில்லை. மரங்கள், செடி, கொடிகளுக்கு நடுவே வீடுகள் அமைத்திருந்தாலும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. கிராமப்புறங்களிலேயே இப்படி என்றால் நகர்ப்புறங்களை பற்றி ெசால்லவா வேண்டும். அதுவும் சென்னை நிலைமை எப்படி இருக்கும் என்று நினைத்து பார்க்க முடியாத ஒன்றாக உள்ளது.

அடுப்பில் வைக்கப்பட்ட சட்டியில் கை வைத்தால் எப்படி இருக்குமோ அப்படித் தான் சென்னை மக்களின் நிலைமை உள்ளது. அரபு நாடுகளில் இருப்பது போன்ற நிலை சென்னைக்கு வந்து விட்டது என்றே சொல்லலாம். சென்னை மக்களை அந்த அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குடிசை வீடுகளிலும் ஏசி பொருத்த கூடிய நிலை உருவாகிவிட்டது. மாலை நேரங்களில் வெப்பம் அப்படியே வீடுகளுக்குள் இறங்குவதால் மின்விசிறிக்கெல்லாம் தாக்கு பிடிக்க முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழ்நாட்டில் தற்போது வெப்ப அலை வீசத் தொடங்கியுள்ளதால் தான் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இப்போதே இப்படி இருப்பதால், மே மாதத்தில் வரக்கூடிய அக்னி வெயிலை எப்படி சமாளிப்பது என்று மக்கள் புலம்ப தொடங்கி விட்டனர்.

சென்னையில் கோடை வெப்பம் ஒரு பக்கம் கொளுத்தி வரும் நிலையில், குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் சரிவு மற்றொரு பக்கம் பொதுமக்களை அச்சுறுத்தி வருகிறது. எனவே, சென்னை மக்களுக்கு தற்போது கிடைக்கக்கூடிய சீரான குடிநீர் தொடர்ந்து கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வழக்கமாக, கோடை காலம் வந்துவிட்டாலே குடிநீர் தட்டுப்பாடு ஆங்காங்கே தலைதூக்குவது வழக்கம். ஆனால், நல்ல வேளையாக கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் தமிழ்நாட்டில் பல இடங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக மிக்ஜாம் புயல் காரணமாக கடந்த டிசம்பரில் சென்னையில் இடைவிடாது கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சென்னை வெள்ளத்தில் தத்தளித்தது. அதேவேளையில் சென்னையில் உள்ள ஏரிகள் முழுவதுமாக நிரம்பின. இதனால் கோடையில் எவ்வளவு வெயில் அடித்தாலும் இந்த ஆண்டு தண்ணீர் பிரச்னை வர வாய்ப்பில்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் அடித்து கூறினர்.

ஆனால், பிப்ரவரி மாதம் அடிக்க தொடங்கிய வெயிலால் சென்னை முதல் கன்னியாகுமரி வரை ஏரி, குளம் கண்மாய்களில் இருந்த தண்ணீர் விரைவாக ஆவியாகி வருகிறது. இந்நிலையில் தான் கடும் வெப்பம் காரணமாக, சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி, சோழவரம், புழல், கண்ணன்கோட்டை – தேர்வாய்கண்டிகை (நீர்த்தேக்கம்) ஆகிய 5 ஏரிகளில் தண்ணீர் வேகமாக ஆவியாகத் தொடங்கியுள்ளது.  ஏற்கனவே, அண்டை மாநிலமான பெங்களூருவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் அனைவரும் தொடர்ந்து அவதி அடைந்து வருகின்றனர். இதேபோன்று பல்வேறு மாநிலங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதேபோன்ற நிலைமை சென்னையில் ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஏனென்றால், ஏற்கனவே வீராணம் ஏரியில் தண்ணீர் குறைந்த நிலையில், சென்னை மக்களின் குடிநீர் தேவைக்கும் தண்ணீர் அனுப்பப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இதே நிலைமை சென்னை ஏரிகளுக்கும் வந்து விடுமோ என்ற கவலை மக்கள் தொற்றிக் கொண்டுள்ளது. சென்னை மக்களுக்கு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க ஒரு மாதத்திற்கு 1 டிஎம்சி குடிநீர் தேவைப்படும் சூழ்நிலையில், தற்போது சென்னை ஏரிகளில் மொத்தமாக 6 டிஎம்சி அளவுக்கு குடிநீர் இருப்பு உள்ளது. எனவே இந்த ஆண்டு எப்பேற்பட்ட வெப்ப அலை வீசினாலும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்பே இல்லை என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்திருப்பது மக்கள் மத்தியில் ஆறுதலை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் அதிகரிக்கும் போது, வெப்ப சலனம் காரணமாக வழக்கமாக மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு மழை குறைவாகவே பெய்துள்ளது. வழக்கமாக மார்ச் 1 முதல் ஏப்.27 வரை தமிழகத்தில் சராசரியாக 54 மிமீ மழை பெய்யும். ஆனால் இந்த ஆண்டு 9.4 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. இது வழக்கமான அளவை விட 83 சதவீதம் குறைவு.

இந்த காலகட்டத்தில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 16 மாவட்டங்களில் ஒரு சொட்டு மழை கூட பெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் 57 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் இருப்பு உள்ளதால் தற்போது குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை என குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. ஆனாலும் சுட்டெரிக்கும் வெயிலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் ஏரிகளில் நீர் வேகமாக ஆவியாகி வருகிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒரு வாரத்திற்கு முன்பு நீர் இருப்பு 60 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 50 சதவீதமாக குறைந்துள்ளது, சென்னைவாசிகளின் அச்சத்தை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இருப்பினும், இந்த கோடையை சென்னை சமாளிக்கும் வகையில் ஏரிகளில் நீர் இருப்பு உள்ளது.

இந்த ஏரிகள் தண்ணீர் இல்லாமல் வறண்டாலும் கூட கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் முழு அளவில் கைகொடுக்கும் என குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மாற்று வழிகள் சென்னை குடிநீர் வாரியத்திடம் ஏராளமாக உள்ளதால் எப்படிப்பட்ட வெப்ப அலை வீசினாலும் இந்த கோடை காலத்தில் சென்னை மக்களுக்கு முழு அளவில் சீரான குடிநீர் வழங்கப்படும் என்று சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரி ஓருவர் கூறியதாவது: சென்னை மாநகராட்சி 15 மண்டலங்களில் 200 வார்டுகள் உள்ளன. இதில், 85 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். 2021 ஜூன் வரை நாளொன்றுக்கு 850 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. ஆனால் அதே ஆண்டு ஆகஸ்ட் முதல் நாளொன்றுக்கு 1000 முதல் 1072 மில்லியன் லிட்டர் வரை குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் மொத்த கொள்ளளவு 13.222 டிஎம்சி. இந்த ஏரிகளில் நேற்றைய நிலவரப்படி நீர் இருப்பு 6.66 டிஎம்சியாக உள்ளது. ஒரு டிஎம்சி தண்ணீரை கொண்டு ஒரு மாதத்துக்கு குடிநீர் வழங்க முடியும். அதன் அடிப்படையில், 6 டிஎம்சி நீரினைக் கொண்டு அக்டோபர் மாதம் வரை தங்கு தடையின்றி குடிநீர் வழங்கிட முடியும். மேலும், 3 கடல்நீரை குடிநீராக்கும் நிலையங்கள் மூலம் நாளொன்றுக்கு 360 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்க முடியும். இதுதவிர, பேரூரில் ரூ.4276.44 கோடி மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கடல்நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டலின் அடிக்கல் நாட்டி பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. இது பயன்பாட்டுக்கு வந்தால், ஏரிகள் வறண்டாலும் கூட சென்னை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் குடிநீர் வழங்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.

The post வெப்ப அலை வீசுவதால் ஏரிகளில் வேகமாக ஆவியாகும் தண்ணீர்: மொத்தம் 6 டிஎம்சி நீர் இருப்பதால் அக்டோபர் வரை சீரான குடிநீர் சப்ளை; பற்றாக்குறைக்கு வாய்ப்பில்லை appeared first on Dinakaran.

Tags : Chennai Drinking Water Board ,Tamil Nadu ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED சென்னையில் அக்டோபர் மாதம் வரை எவ்வித...